உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 15 ஆகஸ்ட், 2012

சின்ன சின்னதாய் காதல்..6


கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)

உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...

அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........

நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........

நான் எதைக்கொடுத்தாலும்
எப்படி
உடனே திருப்பித்தருகிறாய்

கவிதைகளாய் :)

கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி....

எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)

உன் முத்தங்களை வெல்ல நினைத்து
மொத்தமாய் தோற்றுப்போன
இந்த கவிதைக்கு
என்ன பெயர் வைப்பது?....


என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,

உனக்கும்
இந்த மழைக்கும் :)

நம் ஒவ்வொரு சந்திப்பும்
புத்தகத்தின் கடைசி பக்கங்களின்
புதைந்திருக்கும் முடிவைப்போன்றது
சுபமாய் இருந்தாலும்
சுலபமாய் இருந்துவிடுவதில்லை :)

எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...

எதை எழுதினாலும்
அதை பாதியிலே
நிறுத்திவிடுகிறது
பாழாய் போன
உந்தன் நினைவு.... :)

என் எழுதுபொருளில்
நீயிருக்கிறாய்
என்பதற்காகவே எழுதப்படுகின்றன
இவ்வரிகள் ஒவ்வொன்றும் :)


ஒவ்வொரு புரையேறுதலுக்கு
பின்னும்
புரையோடிப்போன
உந்தன் நினைவுகள் மீட்டெடுக்கின்றன
என்னை...........

வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு

அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு
 

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கேள்வியாய் நான்...




சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தை
சாவகாசமாய் இளைப்பார
நீளும் வாழ்க்கையென
ஒவ்வொருஇரவிலும்,
அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறது
தோல்வியின் தடயங்கள்...

அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...

இந்த தனிமையில் வலி
நெஞ்சைகிழிக்க
வலிதாளாது
துவண்டுவிழுகின்றேன்...
ஒவ்வொரு இரவும்
ஒவ்வொருவரின் வரவால்
வாய்பிழக்கச்செய்தது
வாழும் நம்பிக்கையை...

அந்த இருண்ட அறையில்
கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,
அங்கிருந்து அகற்றப்பட,
என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட
கறுப்பு பக்கமொன்றை
தேடிக்கொண்டிருகின்றேன்
நான்.....


சனி, 4 ஆகஸ்ட், 2012

இப்படியாக நான்...

 
விந்தின் வழி முளைக்கவில்லை
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...

பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..

ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு...

ஆனாலும் ஆண்டவர்கள்
என்னை அடிமைபடுத்த,
ஆன்மீகர்கள் என்னை பாடாய்படுத்த,
பலரும் பலவாறு
என் கற்பை கலைக்க
வெற்றுகாகிதமென்னை வேசியாய்
மாற்றியவர் நீர்...
ஆசையாய் பலர் புணர,
அடுத்தடுத்து பலர் கைக்களுக்கு
மாற்றி விட்டவர் நீர்..

என்னை படைத்த மனிதரின்
கடவுளுக்கும்யெனை
காணிக்கையாக்கியவர் நீர்..

இயந்திர மனிதனாய்
மாறிப்போன மனிதனின்
மாற்றிபோட்ட செய்கைக்கு
பின்
என்னை காரணம் காட்டும்
மனிதனே
உந்தன் செய்கைக்கு
எனக்கு எதற்கு சாயம்?...

படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...

வெற்று காகிதமெனை
வேசியாய் மாற்றாதீர்....
பின் உங்கள் கயமை எனக்கும் வரக்கூடும்..
ஜாக்கிரதை....

இப்படிக்கு
பணம்....